மூலிகை மருத்துவம்: வெரிக்கோஸ் வெயினுக்கு விடைகொடுப்போம்!
நமது உடலில் ஏராளமான ரத்தக்குழாய்கள் குறுக்கும் நெடுக்குமாக சென்று உடலின் அனைத்து பாகங்களையும் இருதயத்தோடு இணைக்கின்றன.
விலங்குகளைப் போல் அல்லாமல் மனிதர்கள் நிமிர்ந்து நடப்பதால் இருதயத்திலிருந்து வயிறு, கால், பாதம் போன்றவற்றிற்கு செல்லும் ரத்தம் மீண்டும் ஆக்சிஜன் கலப்புக்காக புவியீர்ப்பு விசையையும் மீறி இதயத்திற்கு வருவதற்கு சில சிரமங்கள் ஏற்படுகின்றன.
ஆக்சிஜன் கலந்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் நாடிகளும், ஆக்சிஜன் செலவழிந்து போன ரத்தத்தை எடுத்துச் செல்லும் சிரைகளும் தங்கள் அமைப்பில் சில மாறுதல்களைக் கொண்டுள்ளன. சிரைகளில் காலில் இருந்து இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச்செல்வதற்கு ஏதுவாக வால்வுகள் உள்ளன.
இவை காலிலிருந்து இதயத்திற்கு கிளம்பும் ரத்தத்தை புவியீர்ப்பு விசை மற்றும் நமது எடையின் காரணமாக மீண்டும் கீழே இறங்கிவிடாமல் தடுக்கின்றன.
இந்த வால்வுகளில் தொல்லை ஏற்பட்டாலோ, ரத்தக் குழாய்களில் தளர்ச்சி ஏற்பட்டாலோ ரத்தக்குழாய்கள் தடித்து, விரிந்து, சுருண்டு ரத்தத்தை உறையவைத்து, குறிப்பிட்ட இடத்தில் தேங்கச் செய்துவிடும். இந்த தொல்லையை நவீன அறிவியல் வெரிக்கோஸ் வெயின், நாளப்புடைப்பு, நாளஅடைப்பு, நரம்பு புடைப்பு என்றும் குறிப்பிடுகிறது. நீண்டநேரம் நின்று பணிபுரிபவர்களுக்கும், பிறவியிலேயே ரத்தக்குழாய்களில் வால்வு பலஹீனம் உடையவர்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் ரத்தத்தில் கொழுப்பு மற்றும் ரத்தக்கட்டி அடைப்பு ஏற்பட்டவருக்கும், அடிவயிற்றில் கடும் அழுத்தம் கொடுத்து நின்று உடற்பயிற்சி செய்பவர்களுக்கும், வயிற்றை இறுக்கும் ஆடை அணிபவர்களுக்கும், நீண்டநேரம் காலை தொங்கவிட்டுக்கொண்டே உட்கார்ந்து பணிபுரிபவர்களுக்கும் காலின் ரத்தக்குழாயில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த ரத்தக்குழாய்களில் பாதிப்பு ஏற்படும்பொழுது கால் முழுவதும் கனமாக உணருதல், காலில் ரத்தக் குழாய்கள் புடைத்து காணப்படுதல், கணுக்கால்களில் வீக்கம், முழங்காலுக்கு கீழ் உள்ள பகுதிகள் கருஞ்சிவப்பாக மாறுதல், காலில் காயம் ஏற்பட்டால் ரத்தம் நிற்காமல் பீச்சி அடித்தல், புண்கள் தோன்றி பல ஆண்டுகள் ஆறாமல் இருத்தல் ஆகியன வெரிக்கோஸ் வெயினின் அறிகுறிகளாகும்.
வெரிக்கோசால் பாதிக்கப்பட்டவர்கள் நீண்டநேரம் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். இரவில் படுக்கும்போதோ அல்லது அமர்ந்திருக்கும்போதோ காலை சற்று தூக்கிக் கொண்டு படுக்க வேண்டும். அதிகமான நரம்பு புடைப்பு காணப்பட்டால் காலை இறுக்கி கட்டும் இழுவை கச்சை துணிகளை அணிய வேண்டும். பெண்களுக்கு பிரசவத்திற்கு பின்பும், மளிகைக்கடை வைத்திருப்பவர்கள், அதிக உடல் எடை உடையவர்கள், நீண்டநேரம் நிற்கும் காவல் பணியாளர்கள், இஸ்திரி செய்பவர்கள் வெரிக்கோஸ் தொல்லையால் பாதிக்கப்படுகின்றனர். நாட்பட்ட வெரிக்கோஸ் தொல்லையில் ரத்தம் உறைந்து, இதய நோயாகவும் மாறும் வாய்ப்பும், புண்கள் சீழ்பிடித்து கால் அழுகும் வாய்ப்பும் உள்ளதால் சிலருக்கு அறுவை சிகிச்சை அத்தியாவசியமாக தேவைப்படுகிறது. நாளப்புடைப்பை கட்டுப்படுத்தி, ரத்தக்குழாய்களுக்கு வலுவையும் அவற்றின் வால்வுகளுக்கு பலத்தையும் தருவதுடன் வீக்கத்தையும் ஒவ்வாமையையும் நீக்கி, ரத்த ஓட்டத்தை சீர்செய்யும் பழம்தான் ஆரஞ்சு.
சிட்ரஸ் சைனன்சிஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட ரூட்டேசியே குடும்பத்தைச் சார்ந்த பெருஞ்செடிகளின் பழங்கள் உணவாகவும் மருந்தாகவும், வழிபாட்டு மூலிகையாகவும் பயன்படுகின்றன. ஆரஞ்சில் காணப்படும் ஹெஸ்பெரிடின், ரூட்டின், நாரிஜெனின், வைட்டமின் ஏ, தையமின், பைரிடாக்சின், போலேட் போன்ற வைட்டமின் பி, வைட்டமின் சி, கரோட்டின்கள், சேந்தின்கள், பொட்டாசியம், கால்சியம் ஆகியன சிறந்த பயோபிளேவனாய்டுகளாக செயல்பட்டு, நாளப் புடைப்புக்கும் அதனால்
ஏற்பட்ட புண்களை ஆற்றவும் பெரிதும் உதவுகின்றன.
பயோபிளேவனாய்டுகள் நிறைந்த ஆரஞ்சு பழச்சாறு 60 முதல் 120 மிலி தினமும் ஒரு வேளை இளஞ்சூடான நீருடன் கலந்து சாப்பிட்டு வர நுண்ணிய குழாய்களில் செல்லும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். ஆரஞ்சு பழச்சாற்றை கடுக்காய்த்தூளுடன் சேர்த்து பிசைந்து, இளந்தீயில் சூடாக்கி, மெழுகுபதம் வந்ததும் வெயிலில் காயவைத்து, பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும். 2 முதல் 4 கிராம் பொடியை மாலையில் 100 மி.லி., வெந்நீரில் கலந்து குடித்துவர நுண்ணிய ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு மற்றும் ரத்தக்குழாய் அதைப்பு நீங்கும். ஆரஞ்சு பழத்தை சாலட், ஜுஸ், ஜாம், ஜெல்லி அல்லது டீ போன்ற ஏதேனும் ஒரு வடிவத்தில் உட்கொள்வது நல்லது.
சர்க்கரை நோயாளிகள் நார்ச்சத்து மிகுந்த பழங்களை உட்கொள்ளலாமா?
பழங்களில் உள்ள நார்ச்சத்து ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கின்றன. குறைந்த அல்லது பூஜ்ஜிய ஆற்றலுடைய நார்ச்சத்துகள் குளூக்கோஸ் கிரகித்தலை தாமதப்படுத்துவதுடன், இன்சுலின் தடையை நீக்கி, செல்களின் இன்சுலின் ஏற்கும் திறனை அதிகரிக்கின்றன. பெர்ரி, ஆப்பிள், பேரிட்சை, நாவல் போன்றவற்றில் போதுமான அளவு நார்ச்சத்தும், மெக்னீசியமும் உள்ளதால் அன்றாடம் குறைந்தளவில் இதனை உட்கொள்ளலாம். மருந்துக்கடைகளில் கிடைக்கம் சிட்ரஸ் பிளேவனாய்டுகள் சேர்ந்த சி.வி.பி. கேப்சூல் தினமும் ஒன்று சாப்பிட்டுவர நாளப்புடைப்பு மற்றும் அதனால் தோன்றிய புண்கள் விரைவில் ஆறும்.
كشف تسربات المياه بالاحساء
ReplyDelete