'நம்மால் முடியும், நம்பு!'
மனவளக்கலை பயிற்சி என்பது வெறும் உடற்பயிற்சி அல்ல.
மனத்தை வளப்படுத்தி, உடலை செம்மைப் படுத்துகிற காரியம் மட்டுமே இந்தப் பயிற்சியில் இருப்பதாக நினைக்காதீர்கள். ஒட்டுமொத்தமாக நம் வாழ்க்கையையே மாற்றி, நல்வழிப்படுத்துகிற விஷயங்கள், இந்த மனவளக்கலைப் பயிற்சியில் பொதிந்திருக்கின்றன. இதைச் சொன்னால் புரியாது. செயலில் இறங்கி, அனுபவித்துப் பார்த்தால்தான் உணரமுடியும்!
'எனக்குத் தாழ்வு மனப்பான்மை ரொம்பவே அதிகம். எதை எடுத்தாலும், இது என்னால முடியாது; என்னை யாருமே மதிக்க மாட்டேங்கிறாங்க; இந்த விஷயத்தைச் செய்யறதுக்கு உண்டான திறமையோ தகுதியோ எனக்கு இல்லைனு தோணும். சில நேரம், நான் வாழறதே வேஸ்ட்டுன்னுகூட நினைச்சுப்பேன்!’ என்றார், சென்னையைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர். கூடுவாஞ்சேரி அறிவுத் திருக்கோயிலில் என்னை நேரில் சந்தித்து, அவர் இப்படிச் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, அடக்கமாட்டாமல் முகம் பொத்தி, முதுகு குலுங்கி, அழத் தொடங்கிவிட்டார்.
அவரின் தோள் தொட்டு, கைகளைப் பற்றிக்கொண்டு, 'திறமையையும்
தகுதியையும் விடுங்க. அதை எப்ப வேணாலும், எப்படி வேணாலும் வளர்த்துக்க முடியும். ஆனா,
நல்லவன்னு பேரு எடுக்கறதுதான் மிகச் சிறந்த தகுதி. நீங்க ரொம்ப நல்லவர். இந்த ஒரு தகுதியே, அடுத்தடுத்த திறமைகளை உங்களுக்குக் கொடுத்துடும், தெரியுமா?’ என்றேன்.
அவருக்கு ஒன்றும் புரியவில்லை.
'நீங்கள் ரொம்ப நல்லவர். எனவே, எவரையும் எப்போதும் எள்முனையளவும் காயப்படுத்தமாட்டீர்கள். எவருக்கும் எந்தத் தருணத்திலும் தீங்கிழைக்கமாட்டீர்கள். மிகக் கஷ்டமான நிலையில்கூட, அடுத்தவரின் பொருளை அபகரிக்கமாட்டீர்கள். பிறரைக் காயப்படுத்தாமல், பிறருக்கு எந்தத் தீமையும் செய்யாமல், பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல் இருக்கிறீர்களே..! இதைவிட, மிகப் பெரிய அருங்குணம் வேறு என்னவாக இருக்க முடியும்?
எவரையும் ஏமாற்றாமல் வாழ்கிற நீங்கள், உங்கள் குடும்பத்தாரையும் உங்கள் முதலாளியையும் ஏமாற்றுவீர்களா, என்ன? அலுவலகத்தில் ஏமாற்றாமல் வேலை செய்தால், வீட்டில் மனைவி- குழந்தைகளுடன் நிம்மதியாக வாழலாம். இதுவரை, இப்படித்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள், நீங்கள்!’ என்றேன். மெள்ள அவர் முகத்தில் மகிழ்ச்சி எட்டிப் பார்த்தது. வெறுமை நிலையில் இருந்து விடுபடுவதற்கு அவர் மனம் தயாராக இருந்தது.
'சரி... சின்ன பயிற்சி ஒன்றைச் செய்து பார்ப்போமா? நன்றாக அமர்ந்துகொள்ளுங்கள். முதுகை நேராக்கிக் கொள்ளுங்கள். இடது கை பெருவிரலால், உங்கள் மூக்கின் இடது துவாரத்தை அடைத்துக் கொள்ளுங்கள். வலது துவாரத்தின் வழியே மூச்சை நன்றாக, வேகமாக வெளியே விடுங்கள். அப்படி விட்ட பின்பு, மீண்டும் வலது துவாரத்தின் வழியே மூச்சை நன்றாக உள்ளிழுத்துக் கொள்ளுங்கள். அடுத்து, ஆள்காட்டி விரலால் வலது துவாரத்தை அடைத்துக்கொண்டு, இடது துவாரத்தின் வழியே, மூச்சை வேகமாக வெளியே விடுங்கள். பின்பு, சட்டென்று வேகமாக உள்ளே இழுங்கள். இப்படிப் பத்து முறை செய்யுங்கள். இடது, வலது என்பதாக, தினமும் காலையில் எழுந்ததும், இரவு தூங்குவதற்கு முன்பும் இரண்டு வேளையும், குறைந்தது பத்து நாட்களுக்கு இதுபோல் செய்து முடித்துவிட்டு, இங்கே வாருங்கள்’ என்று கபாலபதி எனும் மூச்சுப் பயிற்சியை அவருக்குச் சொல்லிக் கொடுத்தேன்.
மனவளக்கலையின் மிக முக்கியமான பயிற்சி இது. மூளைகளின் எல்லா மூலை முடுக்குகளுக்கும் இந்தப் பயிற்சி தருகிற வீரியம் சென்று, கதவு தட்டி உசுப்பிவிடும் என்பது நிஜம்.
இடது கை பெருவிரலால், மூக்கின் இடது துவாரத்தை அடைத்துக் கொள்ளவேண்டும். வலது துவாரத்தின் வழியே முதலில் மூச்சை நன்றாக வெளியேற்றவேண்டும். பிறகு அதே துவாரம் வழியாக, உள்ளிழுக்க வேண்டும். அதாவது மூச்சை வேகமாக வெளியேற்றி, வேகமாக உள்ளிழுத்து... என மாறி மாறிச் செய்யவேண்டும். எக்காரணத்தைக் கொண்டும், ஒரேயரு விநாடி மூச்சை அப்படியே நிறுத்திக்கொள்ளும் செயலைச் செய்யவே செய்யாதீர்கள். அதேபோல், வெளியே விட்டு உள்ளே இழுக்கிற அந்தத் தருணங்களில், உங்கள் வாய் வழியே மூச்சை வெளியேற்றவும் வேண்டாம்; மூச்சை இழுத்துக் கொள்ளவும் தேவையில்லை!
உயர் ரத்த அழுத்தம் எனப்படும் பி.பி. பிரச்னை உள்ளவர்கள், குடல் இறக்கம் மற்றும் இதய நோயாளிகள் இந்தப் பயிற்சியைச் செய்யவேண்டாம். இவர்களைத் தவிர, எவர் வேண்டுமானாலும் எந்த வயதில் வேண்டுமானாலும் இந்தப் பயிற்சியை மேற்கொள்ளலாம்.
மழை மற்றும் குளிர் காலங்களில், சைனஸ் தொந்தரவால் அவதிப்படுபவர்கள், கபாலபதி பயிற்சியை மேற்கொண்டால், சைனஸ் தொந்தரவு முற்றிலுமாக நீங்கிவிடும். மூச்சுக் குழலிலும் நுரையீரல்களிலும் படிந்திருக்கக்கூடிய சின்னச் சின்ன தூசிகளும் வேறு ஏதேனும் பொருட்களும்கூட, சட்டென்று வெளியேறிவிடும். பிறகு, நுரையீரலில் ஒரு சுதந்திரத்தையும், மூச்சுக் குழலில் இலகுவான நிலையையும் உணர்ந்துகொள்ளலாம்.
மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டங்கள், சீராகச் செல்லத் துவங்கும். மூளையில் போதிய அளவு ரத்தம் பாய்கிற உடற்சூழ்நிலை இருந்துவிட்டால், அயர்ச்சிக்கும் சோர்வுக்கும் அவசியமே இருக்காது. மறந்தும்கூட, ஞாபக மறதியில் சிக்கிக் கொள்கிற அவலத்துக்கு வழியே இல்லை. 'செய்யக்கூடிய காரியத்தில் முழுவதுமாக அர்ப்பணித்துக் கொள்வதற்குத் தயாராக இருக்கிறேன். நீ ரெடியா?’ என்று மூளை கட்டளையிட, 'நீங்கள் தயாராக இருந்தால், நானும் தயாராகத்தானே இருப்பேன்! நான் உங்கள் அடிமை அல்லவா! நீங்கள் உட்காரச் சொன்னால் உட்காருவேன்; ஓடச் சொன்னால் ஓடுவேன்’ என்று உடலானது, தயார் நிலையில் இருப்பதைச் சுட்டிக்காட்டும். ஒரு வேலையை உடலும் புத்தியும் கைகோத்து, ஆழ்ந்து செய்வதைத்தான், ஆத்மார்த்தமாக ஈடுபடுதல் என்கிறோம்!
அந்த சென்னை இளைஞர் பத்து நாட்கள் கழித்து, மீண்டும் வந்தார். அவர் முகத்தில் சின்னதாக ஒரு தெளிவு. சாட்டைக் குச்சியைச் சொடுக்குவதற்காகக் காத்திருப்பார் வண்டியோட்டி. 'அவர் எப்போது சாட்டையைச் சொடுக்குவார்’ என்று குதிரையும் தயாராக இருக்கும், பார்த்திருக்கிறீர்களா? அந்தக் குதிரை போன்று, அந்த இளைஞரின் உடலானது, புத்தியின் கட்டளையை நிறைவேற்றக் காத்திருப்பதாகவே எனக்குப் பட்டது.
சுவிட்சைப் போட்டால்தானே விளக்கு எரியும்! சின்ன தீக்குச்சியைக் கொண்டு பற்ற வைத்தால்தானே மிகப் பெரிய தீப்பந்தத்தை ஏற்றி, இருளை அகற்றலாம்! அந்த இளைஞர் எனும் அழகிய விளக்கு, ஸ்விட்ச் போட்டதும் எரிவதிலும், பிரகாசம் தருவதிலும் வியப்பென்ன இருக்கிறது!
கபாலபதி பயிற்சியில் இல்லாத சில விஷயங்களையும் அவருக்குச் சொன்னேன். அது, அந்த இளைஞருக்கான விஷயம் மட்டுமின்றி, எல்லோருக்குமானதும்கூட!
அது என்ன என்கிறீர்களா?
எந்தவொரு காரியத்தில் இறங்குவதாக இருந்தாலும், ஒரு நிமிடம்... ஒரேயரு நிமிடம்... மூளையை உசுப்புகிற கபாலபதி பயிற்சியையும் செய்துவிட்டு, கண்கள் மூடி, நெஞ்சில் கைவைத்து, மனதார உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள்...
'என்னால் முடியாவிட்டால், வேறு யாரால் முடியும்!’
- வளம் பெருகும்.
No comments:
Post a Comment