காய்கறிகளின் மருத்துவ குணங்கள்
★பீர்க்கங்காய்
மூலிகை மந்திரம் :
நம்முடைய உணவில் முக்கியமான அங்கம் வகிக்கும் காய்கறி வகைகளில், மிக முக்கியமான இடத்தை பீர்க்கங்காய்க்குக் கொடுக்கலாம். அந்த அளவுக்குப் பல நோய்கள் வராமல் தடுக்கும் குணம் கொண்டது என்பதுடன் வந்த நோயை விரட்டும் திறனும் கொண்டது பீர்க்கங்காய்.
மித வெப்பமான சீதோஷ்ண நிலையில் வளரக்கூடிய ஒரு கொடி வகைத் தாவரம் பீர்க்கங்காய் ஆகும். ஆசியா, ஆப்பிரிக்கா பகுதிகளில் பெரும்பாலும் பயிரிடப்பட்டு உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. உணவுக்காக மட்டுமின்றி நாருக்காகவும் பல நாடுகளில் பயிரிடப்படுகிறது.
பீர்க்கங்காயின் தாவரவியல் பெயர் Luffa acutangula என்பது ஆகும். Ribbed gourd என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. கடு கோஷ்டகி, திக்த கோஷ்டகி என்பவை இதன் வடமொழிப் பெயர்கள். இந்தி மொழியில் பீர்க்கங்காயை ஷிரேபல்லி, ஜிங்கதோரீ, தோனா என்கிற பெயர்களால் குறிப்பர்.
பீர்க்கங்காயில் பொதிந்துள்ள மருத்துவப் பொருட்கள் 100 கிராம் எடையுள்ள பீர்க்கங்காயில் சுண்ணாம்புச்சத்து 18 மி.கி. அளவும், மாவுச்சத்து 3 கிராம் அளவும், எரிசக்தி 17 கலோரியும், பாஸ்பரஸ் 26 மி.கி. அளவும் உள்ளது. வைட்டமின் பி2, வைட்டமின் சி, கரோட்டீன், நியாசின், இரும்புச்சத்து, அயோடின் மற்றும் ஃபுளோரின் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாகப் பீர்க்கங்காய் விளங்குகிறது.
பீர்க்கங்காய் இனிப்புச் சுவை
யுடையது என்பது மட்டுமின்றி எளிதில் ஜீரணமாகக் கூடியதாகவும் விளங்குகிறது. உடலுக்குக் குளிர்ச்சி தரும் பீர்க்கங்காய், மிகக் குறைந்த அளவேயான கொழுப்புச் சத்தைக் கொண்டிருக்கிறது. இதனால், உடல் எடையைக் குறைக்க விரும்புவோர்க்கு நல்ல உணவாக அமைகிறது. இதில் மிகுந்த நீர்ச்சத்து இருப்பதும் எடை குறைவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது.
பீர்க்கங்காயின் சாறு மஞ்சள் காமாலை நோய்க்கும் அருமருந்தாக உதவுகிறது. பீர்க்கங்காயை அரைத்துப் பெறப்பட்ட சாறு அல்லது காய்ந்த பீர்க்கங்காயின் விதை மற்றும் சதைப்பகுதியின் சூரணம் மஞ்சள் காமாலை நோயை மறையச் செய்யும் இயற்கை மருந்து என்றால் மிகையில்லை.பீர்க்கங்காயில் ரத்தத்தைச் சுத்தப்படுத்தக்கூடிய வேதிப் பொருட்களும் மிகுந்துள்ளன. குறிப்பாக, மது அருந்துகிறவர்களுக்கு மதுவினால் ஏற்படும் நச்சுக்களை ரத்தத்தில் இருந்து அகற்ற பீர்க்கங்காய் உதவும். ரத்தம் சுத்தமாவதோடு கெட்டுப் போன ஈரலைச் சீர் செய்து மீண்டும் புத்துணர்வோடு செயல்படவும் பீர்க்கங்காய் கை கொடுக்கிறது.
குறைந்த அளவு எரிசக்தி கொண்ட உணவாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவாக விளங்குகிறது. பீர்க்கங்காயில் இருக்கும் பெப்டைட்ஸ், ஆல்கலாப்ட்ஸ், சோன்டின் போன்ற வேதிப்பொருட்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகின்றன. பீர்க்கங்காயில் உள்ள அதிகமான நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்குவதற்கு உதவுகிறது. அது மட்டுமின்றி மூல நோய்க்கும் முக்கிய மருந்தாக பீர்க்கங்காய் விளங்குகிறது.
பீர்க்கங்காய் முற்றி காய்ந்த நிலையில் கூடு போன்ற நார்ப்பகுதியைப் பெற்றிருக்கும். இந்த நார் கொண்டு உடலைத் தேய்த்துக் குளிப்பதால் தோல் ஆரோக்கியத்தையும், பளபளப்பான தன்மையையும் பெறும். தோலின் மேலுள்ள பருக்கள் விரைவில் குணமாகவும் உதவி செய்கிறது. உடலின் துர்நாற்றத்தைப் போக்கவல்ல மருத்துவ குணத்தையும் பீர்க்கங்காயின் நார் பெற்றிருக்கிறது.
ஹோமியோபதி மருத்துவத்தில் பீர்க்கங்காயின் சாறு கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. உணவுப்பாதையின் உட்புறப் பகுதிகளில் ஏற்படும் எரிச்சல் மற்றும் வீக்கத்தைப் போக்குவதற்கும் பீர்க்கங்காய் சாறு பயன்படுத்தப்படுகிறது. மத்திய சித்த ஆயுர்வேத ஆய்வுக்கழகம் பீர்க்கங்காயின் இலை, காய், வேர் போன்றவற்றில் இருந்து பெறப்படும் சாற்றை தினமும் 20 மி.லி. வரையில் ஒரு வேளைக்கான மருந்தாக உட்கொள்வது பலவிதங்களிலும் நல்லது என பரிந்துரை செய்திருக்கிறது. பீர்க்கங்காயை நன்கு உலர்த்திப் பொடித்து நன்கு சலித்து வைத்துக் கொண்டு மூக்குப்பொடி போல மூக்கிலிட்டு உறிஞ்சுவதால் மஞ்சள் காமாலை நோய் மறையும் எனவும் ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது.
பீர்க்கங்காய் மருந்தாகும் விதம்
* ஒரு கப் பீர்க்கங்காய் சாறு எடுத்து அதனோடு இனிப்புச் சுவைக்காக வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்து கலக்கி காலை, மாலை என இரண்டு வேளையும் உணவுக்கு முன் பருகி வருவதால் மஞ்சள் காமாலை நோய் மறைந்து போகும்.
* பீர்க்கங்காயின் சதைப் பகுதியை நன்றாக நசுக்கி காயங்களின் மேல் பற்றாகப் போட்டுக் கட்டி வைப்பதால் ரத்தக் கசிவு நீங்கி காயம் ஆறும்.
* பீர்க்கங்காயைத் துண்டுகளாக்கி இரண்டு டம்ளர் நீர் விட்டு அடுப்பேற்றி நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். அதனோடு சுவைக்காகப் போதிய உப்பு சேர்த்து, காலை, மாலை என இரு வேளை பருகி வருவதால் வயிற்றினுள் துன்பம் தருகிற வயிற்றுப் பூச்சிகள் வெளித்தள்ளப்பட்டு வயிறு சுத்தமாகும்.
* பீர்க்கங்காய் சாறு எடுத்து அரைடம்ளர் சாறுடன் போதிய இனிப்பு சேர்த்து தினமும் இருவேளை குடித்து வருவதால் ஆஸ்துமா எனும் மூச்சு முட்டுதல் குணமாகும்.
* பீர்க்கங்காயின் இலைகளை மைய அரைத்து அதனோடு பூண்டை நசுக்கிச் சாறு எடுத்து சேர்த்துத் பூசி வந்தால் தொழு நோய்ப் புண்கள் விரைவில் ஆறும்.
* பீர்க்கங்காயைச் சிறுசிறு துண்டுகளாக்கி வெயிலில் நன்றாக உலர்த்திக் கொள்ள வேண்டும். பிறகு, இடித்துப் பொடி செய்து வைத்துக்கொண்டு இரவு சாதம் வடித்த கஞ்சியை வைத்திருந்து காலையில் அதனோடு பீர்க்கங்காய் பொடியைக் கலந்து தலைமுடிக்குத் தேய்த்து 20 நிமிடங்களுக்குப் பிறகு குளித்து வருவதால் இளநரை தடை செய்யப்படுவதோடு, தலைமுடி மென்மையாகவும் பளபளப்பாகவும் விளங்கும்.
* பீர்க்கங்காய்க் கொடியின் வேர்ப்பகுதியைச் சேகரித்து நன்கு உலர்த்திப் பொடித்து வைத்துக்கொண்டு தினம் இருவேளை சிறிதளவு உண்டு வர நாளடைவில் சிறுநீரகக் கற்கள் வெளியேறும்.
* பீர்க்கங்கொடியின் இலைகளை எடுத்து நன்றாக நீர் விட்டு அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து சாப்பிட்டு வருவதால் சீதபேதி குணமாகும். வயிற்றுக் கடுப்பும் தணியும்.
* பீர்க்கங்கொடியின் இலையைக் கசக்கிப்பிழிந்து சாறு எடுத்து நாள்பட்ட ஆறாத புண்களைக் கழுவுவதாலோ அல்லது மேற்பூச்சாகப் பூசி விடுவதாலோ விரைவில் புண்கள் ஆறி விடும்.
* பீர்க்கங்காய்க் கொடியின் வேர்ப்பகுதியை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து மேற்பூச்சாகப் பயன்படுத்துவதால் வீக்கமும் வலியும் குறைந்து நெறிக்கட்டிகள் குணமாகும்.
* பீர்க்கங்காய் சாறு எடுத்து உடன் இனிப்பு சேர்த்து வெறும் வயிற்றில் சில நாட்கள் குடித்து வருவதால் பித்தத்தால் வந்த காய்ச்சல் தணிந்து போகும்.
* பீர்க்கங்காய் சாறு அரை டம்ளர் அளவு அன்றாடம் வெறும் வயிற்றில் 48 நாட்கள் குடித்து வருவதால் அதிலுள்ள பீட்டா கரோட்டீன் சத்து கிடைக்கப்பெற்று கண் பார்வை தெளிவு பெறும். கண்களுக்கு ஆரோக்கியம் மேலோங்கும்.
வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பீர்க்கங்காயை உணவில் சேர்த்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ள முடியும்.
எளிதில் கிடைக்கிற, இத்தனை நன்மைகள் நிறைந்த பீர்க்கங்காயை இனியேனும்
பயன்படுத்திக் கொள்வோம்தானே?!
பீர்க்கங்காயில் ரத்தத்தைச் சுத்தப்படுத்தக்கூடிய வேதிப் பொருட்களும் மிகுந்துள்ளன. குறிப்பாக, மது அருந்துகிறவர்களுக்கு மதுவினால் ஏற்படும் நச்சுக்களை ரத்தத்தில் இருந்து அகற்ற பீர்க்கங்காய் உதவும். ரத்தம் சுத்தமாவதோடு கெட்டுப்போன ஈரலைச் சீர் செய்து மீண்டும் புத்துணர்வோடு செயல்படவும் பீர்க்கங்காய் கை கொடுக்கிறது.
No comments:
Post a Comment