உமிழ் நீர் சுரப்பியின் உன்னதம்
உடலில், உமிழ் நீர் சுரப்பிகள், மூன்று ஜோடிகள் உள்ளன. அவைதான் உமிழ் நீரை சுரக்கின்றன.
பரோடிட் சுரப்பி: இது, காதுகளுக்குக் கீழே அமைந்துள்ளது, அளவில் பெரியது. இதன் எடை சுமார் இருபத்தைந்து கிராம்.
இதன் நாளங்கள் வழியாக, கன்னங்களின் உட்புறம், இரண்டு, மேல் கடவாய் பற்களுக்கு மேல், இந்த சுரப்பு நாளங்களின் துவாரங்கள் உள்ளன. இந்த நாளங்களுக்கு ஸ்டென்சன்ஸ் நாளங்கள் என்று பெயர்.
இது, மனித உடலில் நீர் வறட்சி ஏற்படும் போதெல்லாம் அதிகம் சுரந்து வறட்சியை குறைக்கிறது.
சப்மாண்டிபுலர் சுரப்பி: இது, பரோடிட் சுரப்பிகளுக்கு கீழ் அமைந்துள்ளது.
இதன் நாளங்கள், நாக்கின் அடிப்பகுதியில் துவாரங்களாக அமைந்துள்ளன.
சப்லிங்குவில் சுரப்பி: கன்னங்களின் உள்ளே, இரு பக்கங்களிலும் அமைந்துள்ளன. இதன் துவாரங்கள், வாய் முழுவதும் அமைந்துள்ளன.
உமிழ் நீர் எப்படி சுரக்கிறது?
நம் மூளையில், முகுளம் என்றொரு பகுதி உள்ளது. அதுதான் உமிழ் நீர் சுரப்பிகளுக்கு ஆணை பிறப்பிக்கிறது. நாம் உணவை உண்ணும் நேரத்தில், உணவு உணர்வு நரம்புகள் உந்தப்படுகின்றன. அந்த உணர்வு, மத்திய நரம்பு மண்டலம் வழியாக, முகுளத்தை அடைகிறது. முகுளம் உடனே, உமிழ் நீர் சுரக்க, சுரப்பிகளுக்கு, மத்திய நரம்பு மண்டலம் வழியாகவே சமிக்ஞைகளை அனுப்பி விடுகிறது. வாய்க்குழியில் உமிழ் நீரும் சுரக்கிறது.
புளிப்பு, இனிப்பு இவற்றின் சுவையை உணர்ந்தால், வாயில் உமிழ் நீர் தானாக ஊறும். அதுபோல், உடலுக்கு ஒவ்வாமை ஏற்படுத்துகின்ற உணவுகளை சாப்பிட்டாலும், உமிழ் நீர் அதிகம் சுரக்கும்.
இதனாலேயே, முதலில் இனிப்பை நம் பண்டைய உணவு முறைகளில் சாப்பிட வைத்தார்கள்.
உமிழ் நீரின் தன்மைகள்: உமிழ் நீர், காரத்தன்மை கொண்டது. அதிக என்ஸைம்களை கொண்டது. இதில் ஆன்டிபயாடிக் அதிகம் உள்ளது. இவை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. பொதுவாக, இரவில் குறைவாகவும், பகலில் சாப்பிடும் நேரங்களில் அதிகமாகவும், உமிழ் நீர் சுரக்கும்.
ஒரு நாளில், சராசரியாக ஒரு மனிதனுக்கு, 1500 மி.லி. அளவு சுரக்கிறது. இந்த அளவு உண்ணும் உணவின் அளவைப் பொறுத்தும், மன எண்ணத்துக்கும் ஏற்றவாறு மாறுபடுகிறது.
உமிழ் நீரில், 99 சதவீதம் தண்ணீரும், 1 சதவீதம் சோடியம், பொட்டாசியம் பைகார்பனேட் போன்ற பொருட்களும் இருக்கின்றன. தவிர, "ம்யுசின்' என்ற களிமண் போன்ற பொருளும், "அமிலேஸ்' என்ற செரிமான நொதியும், "லைசொனசம்' எனப்படும் கிருமிக்கொல்லி நொதியும் உள்ளன.
உமிழ் நீரின்
பணி ஜீரணமாக்குவது. "நொறுங்கத் தின்றால் நூறு வயது' என்பது பழமொழி. நொறுங்க என்பது, நன்றாக மென்று என்று பொருள். உணவை நன்கு மென்று சாப்பிட்டால் நோயின்றி, நீண்டநாள் வாழலாம்.
உணவை மெல்லும்போது உமிழ் நீர் உணவுடன் நன்கு கலந்து, அதில் உள்ள என்சைம்கள், உணவின் நச்சுத்தன்மையை போக்கி, உணவு குழலுக்கு செல்ல ஏதுவாகிறது. இதில் கலந்துள்ள நொதி, பித்தத்துடன் சேர்ந்து, உணவை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது. பொதுவாகவே, அஜீரணம், வாந்தி, தலைச்சுற்றல் உண்டானால் கூட உமிழ் நீர்தான் அதிகம் சுரந்து உடலை சீர்படுத்துகிறது. வாய்ப்புண்ணை ஆற்ற உதவுவதும் உமிழ் நீர்தான். உமிழ் நீர் சுரப்பியின் அளவு குறைந்தாலும், அதிகரித்தாலும், கடினத் தன்மை அடைந்தாலும் அது நோயின் அறிகுறியாகும்.
சிலர் பாக்கு, புகையிலை மற்றும் போதை வஸ்துக்களை உபயோகிப்பார்கள். அது, உமிழ் நீருடன் சேர்த்து விஷ நீராகி உடலைக் கெடுக்கிறது.
No comments:
Post a Comment