Friday, May 19, 2017

சக்கரை நோயை வெல்ல… உணவுமுறை…

சக்கரை நோயை வெல்ல… உணவுமுறை…

இன்று நாம் சந்திக்கும் நபர்களில் 45 வயதுக்கு மேற்பட்ட 10பேரில் 4 பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்களாக உள்ளனர். இந்த சர்க்கரை நோய் தென்னிந்திய மக்களையே அதிகம் பாதித்துள்ளது. உணவு முறை மாறுபாட்டாலும், மன அழுத்தத்தாலும் போதிய உடல் உழைப்பு, உடற் பயிற்சி இல்லாததாலும், பரம்பரையாகவும் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உடலில் உள்ள கணையச் சுரப்பியில் இன்சுலின் உற்பத்தி பாதிக்கப்படுவதால் சர்க்கரை நோய் ஏற்பட காரணமாகிறது. சர்க்கரை நோயில் இரண்டு வகைகள் உள்ளன.

1. உடலில் இன்சுலின் உற்பத்தி அறவே இல்லாமல் போய்விடுவதால் ஆயுள் முழுவதும் இன்சுலின் எடுத்துக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளவர்கள் இந்த வகை சர்க்கரை நோய்க்கு IDDM (Insulin dependent diabetes mellitus) என்று பெயர். இந்த வகை சர்க்கரை நோய் பெரும்பாலும் குழந்தைகளுக்கு வரக்கூடியது.

2. உடலில் இன்சுலின் உற்பத்தி தேவையான அளவுக்கு உற்பத்தி ஆகாததால் ஏற்படும் பாதிப்பு இரண்டாம் வகை சர்க்கரை நோய். இதை NIDDM (Non Insulin dependent diabetes Mellitus)என்று பெயர்.

இந்த இரண்டாவது வகை சர்க்கரை நோயின் பாதிப்புதான் மேற்கண்ட உணவுமுறை மாறுபாடு, உடல் பருமன், மன அழுத்தம், உடல் உழைப்பின்மை இவற்றால் வருவது. இதுதான் இந்திய மக்களை அதிகமாக பாதிக்கும் சர்க்கரை நோயாகும். இந்த நோயை சித்தர்கள் மதுமேகநோய் என்று கூறுகின்றனர்.

சர்க்கரை நோயின் பாதிப்பு வராமலும், வந்த பின் அதை கட்டுப்படுத்தவும் முறையான உணவு முறையினை கடைப்பிடிக்க வேண்டும்.

பொதுவாக 40 வயதைக் கடந்தவர்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை பரிசோதித்துக் கொள்வது நல்லது.

உடல் நல்ல ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு ஏதும் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் இருக்கும்போது சோதித்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 110 மி.லி.க்கு குறைவாக இருக்க வேண்டும்.

சாப்பிட்டு 1 1/2 மணி நேரம் கழித்து சர்க்கரை அளவு 140 மி.லி. க்கு குறைவாக இருக்க வேண்டும்.

சர்க்கரை நோய் உடனே ஏற்படும் நோயல்ல. குடும்பத்தில் சர்க்கரை நோய் யாருக்காவது இருந்தால் அவர்கள் 30 வயதுக்குமேல் ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால் மருந்துகள் மற்றும் உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் சர்க்கரையை கட்டுக்குள் கொண்டுவந்து விடலாம்.

சமச்சீரான உணவு

சர்க்கரை நோயாளிகள் சமச்சீரான உணவில் கவனம் செலுத்துவது அவசியம். புரதம், கார்போஹைட்ரேட், குறைந்த அளவு கொழுப்பு, வைட்டமின்கள் இவற்றை போதுமான அளவு சேர்த்து வருவதே சமச்சீரான உணவாகும்.

சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ள சமச்சீரான உணவை இனி பார்ப்போம்.

தானிய வகைகள்

அரிசி, கோதுமை, கேழ்வரகு போன்ற தானியங்கள் உணவுக்கு உகந்த தானியங்களாக இப்போது நடைமுறையில் உள்ளன. இதில் அரிசியைவிட கோதுமையில் புரதச் சத்து அதிகம். மேலும் தானிய வகைகளில் கூடுதல் நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் மிகுந்துள்ளதால் உணவு மெதுவாக சீரணம் ஆகும். இது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.

அரிசி சாதம்தான் சர்க்கரை நோய்க்கு காரணம் என்று பலர் நினைக்கின்றனர். அது தவறான கருத்தாகும். தவிடு நீக்கப்பட்ட அரிசிதான் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகப்படுத்தும். அனால் தவிடு நீக்காத கைக்குத்தல் அரிசி மிகவும் சிறந்த உணவாகும்.

கோதுமை, ராகியிலும், அரிசி போன்றே 70 சதவிகிதம் மாவுச்சத்து நிறைந்துள்ளது. தானியங்களை சரியான அளவில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

பருப்பு வகைகள்

உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, மைசூர் பருப்பு ஆகியவற்றில் புரதச் சத்து நிறைந்துள்ளது. அதுபோல் முளை கட்டிய பயறு வகைகளையும் உணவில் தினமும் சேர்த்துக் கொள்ளலாம். வைட்டமின் பி மற்றும் சி சத்து குறிப்பிடத்தக்க வகையில் இதில் உள்ளது.

காய்கறிகள்

சர்க்கரை நோயாளிகள் தினமும் உணவில் காய்கறிகள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் குறைந்த கலோரியில் அதிக சக்தியைக் கொடுக்கும் ஆற்றல் காய்கறிகளுக்கு உண்டு. காய்கறிகளில் வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் நிறைந்துள்ளன. உதாரணமாக வைட்டமின் சி, கால்சியம், ரிபோஃபிளேவின், ஃபோலிக் அமிலம், காய்கறிகளில் உள்ளதால் அவை உடலுக்கு வலுவைத் தரக்கூடியவை.

சர்க்கரை நோயின் பாதிப்புள்ளவர்கள் தினமும் அதிகபட்சம் 400 கிராம் அளவுக்கு காய்கறிகள் சாப்பிட வேண்டும். காய்களில் நார்ச்சத்து அதிகமிருப்பதால் மலச்சிக்கலைப் போக்குகிறது. உணவு இடைவேளைகளில் பசியெடுத்தால் பச்சை காய்கறிகளை சாப்பிடலாம். தோல் நீக்காமல் நன்கு நீரில் சுத்தம் செய்து அவைகளை சாப்பிட்டால் அவற்றின் ஊட்டச் சத்துக்கள் அனைத்தும் முழுவதுமாக நமக்கு கிடைக்கும்.

வாழைப்பூ, வாழைத்தண்டு, பீர்க்கங்காய், புடலங்காய், வெள்ளை முள்ளங்கி, கத்தரிக்காய், பீன்ஸ், வெண்டைக்காய், முட்டை கோஸ், வெள்ளரிக்காய், சௌ சௌ, கொத்தவரங்காய், முருங்கை காய், பாகற்காய், சுரைக்காய், பூசணிக்காய், கோவக்காய், வெங்காயம், பூண்டு, பப்பாளிக்காய் போன்ற காய்களும், அரைக்கீரை, புதினா, கறிவேப்பிலை, கொத்துமல்லி, குறிஞ்சாக் கீரை, குப்பைக் கீரை, ஆரைக்கீரை போன்ற கீரை வகைகளும் சாப்பிடலாம்.

காய்கறிகளில் காரட், பீட்ரூட், பட்டாணி, ஆகியவற்றை குறைவாக பயன்படுத்தலாம். நன்கு கடைந்த மோரில் நீர் பெருக்கி அருந்தலாம். சர்க்கரை சேர்க்காமல் எலுமிச்சை ஜூஸ் அருந்தலாம். மிளகு ரசம் மிகவும் நல்லது.

வெள்ளரிக்காய், வெங்காயம், வெள்ளை முள்ளங்கி, குடைமிளகாய் இவைகளை சாலட்டாக சாப்பிடலாம்.

பழங்கள்

பழங்களில் ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துகுடி, கொய்யா, பேரிக்காய், பப்பாளி, நாவல் பழம் போன்றவற்றை குறைந்த அளவு சாப்பிடலாம். பழங்களை ஜூஸ் செய்யாமல் அப்படியே சாப்பிடுவது நல்லது.

அசைவ உணவு

முட்டையின் மஞ்சள் கருவை நீக்கி சாப்பிடுவது நல்லது. அதுபோல் மீன் சாப்பிடுவது நல்லது. மீன் மூலம் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக கிடைக்கிறது. இது உடலுக்கு நன்மை பயக்கக்கூடியது. மருத்துவரின் ஆலோசனைப்படி வாரம் இருமுறை 100 முதல் 200 கிராம் வரை மீன் சாப்பிடலாம்.

எண்ணெய் வகைகள்

உணவில் கலோரிகளை அதிகரிப்பது சமையல் எண்ணெய்தான். நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், தவிடு எண்ணெய், கடுகு எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை பயன் படுத்தலாம். ஆனால் குறைந்த அளவே பயன்படுத்த வேண்டும்.

தவிர்க்க வேண்டிய பொருட்கள்

உருளைக் கிழங்கு, சேனைக் கிழங்கு, சேப்பங்கிழங்கு, வள்ளிக் கிழங்கு ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.

சர்க்கரை, தேன், குளுக்கோஸ், ஜாம், வெல்லம், இனிப்பு வகைகள், பிஸ்கட்டுகள், கேக், இளநீர், குளிர் பானங்கள், மதுபான வகைகள், ஹார்லிக்ஸ், பூஸ்ட், போன்விட்டா, காம்பளான், போன்ற சத்துப் பொருட்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். சர்க்கரை சேர்க்காத பிஸ்கட் வகைகளை சாப்பிடலாம்.

சுத்திகரிக்கப்பட்ட மைதா, ரவை, சேமியா போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

பழங்களில் மாம்பழம், பலாப்பழம், சப்போட்டா பழம், சீதாபழம், பேரீச்சம் பழம், அத்திப்பழம், திராட்சை போன்ற பழவகைகளை தவிர்க்க வேண்டும்.

அசைவ உணவில் ஆட்டிறைச்சி, முட்டையின் மஞ்சள் கரு, கோழி இறைச்சி இவற்றை தவிர்க்க வேண்டும்.

எண்ணெய் வகையில் நெய், வெண்ணெய், வனஸ்பதி, பாமாயில் இவற்றை தவிர்ப்பது நல்லது.

காலை முதல் மாலை வரை

காலை எழுந்தவுடன் சர்க்கரை சேர்க்காமல் காபி அல்லது டீ, பால் சாப்பிடலாம். காலை 8 மணிக்கு டிபனாக இட்லி, தோசை, சப்பாத்தி, சாப்பிடலாம். அல்லது கேழ்வரகு உணவு வகைகளை சாப்பிடலாம்.

மதிய உணவுக்கு முன்பு அதாவது 10.30 மணி அளவில் சர்க்கரையின்றி எலுமிச்சை ஜூஸ், நீர் விட்டு கடைந்த மோர், காய்கறி சாலட் சாப்பிடலாம்.

12.30 மணிக்கு மதிய உணவில் சாதம், சாம்பார், ரசம், காய் பொரியல், கீரை, சாலட், முளைகட்டிய பயறு வகைகள் சேர்த்து சாப்பிடலாம்.

பிற்பகல் மூன்று மணிக்கு சர்க்கரை இல்லாத காபி, அல்லது டீ மற்றும் சுண்டல் அல்லது காய்கறி சாலட். சாப்பிடலாம்.

இரவு 8 மணிக்கு கோதுமை ரொட்டி, அல்லது கேழ்வரகு ரொட்டி சாப்பிடலாம்.

படுக்கைக்கு செல்லும் முன் பால் அருந்துவது நல்லது. உணவை அளவாக சாப்பிட வேண்டும். வயிறு புடைக்க சாப்பிடக் கூடாது. நீர் அதிகம் அருந்த வேண்டும்.

இதோடு உடற்பயிற்சி, தியானம், யோக போன்றவற்றை செய்து வந்தால் சர்க்கரை நோயை எளிதில் கட்டுப்படுத்தி ஆரோக்கியமாக வாழலாம்.





ALEXANDER:

9766540761

(மும்பை) 

No comments:

Post a Comment