Monday, October 31, 2016

ரத்தச் சோகை

இளம் பெண்களை தாக்கும்
ரத்தச்சோகை

              பெண்களின் நலமே நாட்டின் நலம்.

ஒரு வீட்டில் பெண் ஆரோக்கியமாக இருந்தால் தான் அந்த வீட்டில் அனைவரும் நலமாக இருக்க முடியும். இதைத்தான் பாரதி

மாதராய்ப் பிறந்திட மாதவம் செய்திட வேண்டும் --என்றார்.

இந்திய நாடு பெண்களை சக்தியாகப் போற்றி வந்துள்ளது. இடைப்பட்ட காலத்தில் ஆணாதிக்கம் மிகுந்து பெண்களை அடிமைப்படுத்தியது. அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று வெற்று வேதாந்தம் பேசி ஒரு நூற்றாண்டை சீரழியச் செய்தது.

இதனால் பெண் பிள்ளைகள் பிறந்தவுடன் கள்ளிப்பால் கொடுத்து சாகடித்தனர். அப்படியும், தப்பிய பெண் குழந்தைகளுக்கு சரியான உணவு கொடுக்காமல் அவளை உடலாலும் உள்ளத்தாலும், பாதிப்படையச் செய்தனர். அந்த பெண் எதிர்கால சந்ததியினரை உருவாக்கக்கூடியவள் என்பதை அனைவருமே மறந்தனர். அந்நேரத்தில் பெண்களே பெண்குழந்தைகளுக்கு எதிராக இருந்தனர். தானும் ஒரு பெண்தான் என்பதை மறந்து பெண் பிள்ளைகளை சுமையாக நினைத்தனர்.

இன்று இந்தியாவில் ஆண் பெண் விகிதாசாரம் 1000 ஆண்களுக்கு 971 பெண்கள் தான் உள்ளனர். இன்னும் சில மாநிலங்களில் நிலமை இன்னும் மோசமாக உள்ளது. கல்வியில் முதலிடம் பெறும் கேரளாவில் மட்டும்தான் 1000 ஆண்களுக்கு 1041 பெண்கள் என்ற விகிதத்தில் உள்ளனர்.

இன்று இந்தியாவில் 64 சதவிகித பெண் குழந்தைகள் இரத்த சோகை நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். பெண் குழந்தைகளுக்கு சிறு வயது முதலே அவர்கள் உடல் வளர்ச்சிக்குத் தேவையான சத்தான உணவுகள் இன்றி வளர்கின்றனர். இதனால் அவர்களின் உடல் வளர்ச்சி மாறுபாட்டின்போது அவர்கள் போதிய சத்தின்றி உடல்நலம் குன்றி காணப்படுகின்றனர். இதனால் அவர்கள் பூப்பெய்தியவுடன் மேலும் பல பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். இரும்பு சத்து குறைவினால் அதாவது, இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறைவதால் உடல் சேர்வடைந்துவிடுகிறது. மேலும் மாத விலக்குக் காலங்களில் ஏற்படும் உதிர இழப்பால் எலும்புகள் பலமிழக்கின்றன. இரத்தத்தில் பித்தம் அதிகரித்து இரத்தம் சீர்கேடு அடைந்து தலைவலி, தலைச்சுற்றல் வாந்தி மயக்கம் ஏற்படுகின்றது.

மேலும் கர்ப்பப்பை வீக்கம், ஒழுங்கற்ற உதிரப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்றவை ஏற்படுகிறது. இதனால் இரத்த சோகை அதாவது அனீமியா ஏற்படுகிறது.

· இரத்த சிவப்பணுக்களின் (Red blood cells) தொடக்கம் சீராக இல்லாத நிலையில் இரத்தச் சோகை உண்டாகும். (Dyshaemopoietic anemia)

· வலுவற்ற, பாதிக்கப்பட்ட எலும்பு மஜ்ஜை (bone marrow) யினாலும் ரத்தச் சோகை உண்டாகும்.

· இரத்த சிவப்பணுக்கள் இறந்து போவதால் (aemolytic anemia) இரத்தச் சோகை ஏற்படும்.

· இரத்தம் அதிகம் வெளியேறுவதால் (Haemorrhagic anemia) 

· இரத்தம் மாசுபடுதல் 

போன்ற காரணங்களால் இரத்தச் சோகை பெண்களுக்கு ஏற்படுகிறது.

மேலும் இவர்கள் குழந்தை பேறுக்குப்பின் உடல் பலம் இழப்பதால், கை, கால் மூட்டு, இடுப்பு போன்ற இடங்களில் வலி ஏற்படுகிறது. மேலும், மலத்தையும், சிறுநீரையும் பெண் குழந்தைகள் அடக்குவதால் மலச்சிக்கல், சிறுநீரகக் கோளாறு ஏற்பட வாய்ப்பாகிறது. இதனால் ஈரல் பாதிக்கப் பட்டு பித்தம் அதிகரித்து ரத்தத்தில் கலந்து உடலை நோய் எதிர்ப்பு சக்தியின்றி ஆக்குகிறது.

இரத்தச் சோகையின் அறிகுறிகள்

· மயக்கம் அல்லது காரணமில்லாத சோர்வு.

· சிறிது உணவு சாப்பிட்டவுடன் வயிறு நிறைந்துவிட்டது போன்ற உணர்வு,

· உணவு செரிமானமாகாமல் இருத்தல்.

· உடல் வெளுத்துக் காணப்படல்

· முகத்தில் வீக்கம் உண்டாதல்

· நகங்களில் குழி விழுதல்

· கண்குவளைகள் மற்றும் நாக்கு வெளுத்து இருத்தல்

இத்தகைய ரத்தச் சோகையை போக்க இளம்பெண் குழந்தைகளுக்கு உணவில் அதிக இரும்புச்சத்துள்ள கீரைகளான,

முருங்கைக்கீரை,

ஆரைக்கீரை

அரைக்கீரை,

புதினா,

கொத்தமல்லி,

கறிவேப்பிலை

அகத்திக்கீரை,

பொன்னாங்கண்ணி கீரை,

போன்ற கீரைகளையும்,

திராட்சை, பேரீச்சை, உலர்ந்த திராட்சை, பப்பாளி, அத்திப்பழம், மாம்பழம், பலாபழம், சப்போட்டா, ஆப்பிள், நெல்லிக்கனி போன்ற பழங்களையும் தினமும் கொடுத்து வருவது நல்லது. இதனால் ரத்தம் விருத்தி அடைந்து, ரத்தச்சோகை நீங்கும்.

மேலும் முளைகட்டிய பச்சை பயறு, முந்திரி பருப்பு, உளுந்தங்களி, பாதாம், பிஸ்தா பருப்பு போன்றவை அதிகம் உணவில் சேர்த்து வருவது நல்லது. காய்கறி சாலட்டுகள் அடிக்கடி கொடுப்பது நல்லது. 

பெண் குழந்தைகள் பருவ வயது வரையும் அதற்கு பின்பும் மேற்கண்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் இரத்தச்சோகை நீங்கும். பெண்பிள்ளைகள்தான் எதிர்கால இந்தியாவை உருவாக்கும் தூண்கள். ஆரோக்கியமும், அறிவும் அவர்களின் பொக்கிஷமாக இருந்தால்தான் எதிர்கால இந்தியா வளமாகும்.net

No comments:

Post a Comment