சிறிய - அரிய பயனுள்ள மருத்துவ குறிப்புகள்
* காலையில் எழுந்தவுடன் உங்களை அறியாமல் நீங்கள் உங்கள் கைளை நீட்டுவீர்கள். முதுகை பின்புறம் வளைப்பீர்கள். கழுத்தினை இருபுறமும் திருப்புவீர்கள். இது நீங்கள் உணராமலேயே நீங்கள் உங்களுக்கு செய்து கொள்ளும் ‘ஸ்டிரெச்’ பயிற்சி யோகா. இதனை சில நிமிடங்கள் முறையான பயிற்சியாக செய்து விடுங்கள் . உங்கள் ரத்த ஓட்டத்தை சீராக்கும். ஜீரண சக்தி கூடும். முதுகு வலியினை நீக்கும்.
* காலை உணவுதான் பல ஆக்கப் பூர்வ செயல்களை உடலுக்கு கொடுப்பதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. அநேகர் எடை குறைய வேண்டும் என்ற கருத்தில் காலை உணவை தவிர்த்து விடுவார்கள். நேரமின்மை என்ற காரணத்தினை காட்டி காலை உணவினை தவிர்த்து விடுவார்கள். இவர்களை நீங்கள் பார்த்தால் அநேகர் எடை கூடியவர்களாக இருப்பார்கள். பழம், நார்சத்து நிறைந்த தானியம், கொழுப்பில்லாத பால் அல்லது தயிர் முட்டை போன்றவைகளை சேர்த்து காலை உணவாக உண்ணும்போது நீங்கள் அறியாமலேயே உங்கள் உடல் ஆரோக்கியம் காக்கப்படுகின்றது.
* பல் தேய்ப்பது என்பது இன்னமும் சிறுவர் முதல் பெரியவர் வரை பலருக்கு வகுப்பே எடுக்க வேண்டும் என்றே தோன்றுகின்றது. அரை நிமிடம் கூட பல் தேய்க்காத அவசரம் பலருக்கு இருக்கின்றது. சிலர் கரடு முரடாக பல் தேய்ப்பதை போல் பல், தேய்த்து பல்லினையும், ஈறுகளையும் பாதிப்படைய செய்து விடுவார்கள். ‘ப்ளாஸ்’ எனப்படும் பல் இடைவெளிகளை சுத்தம் செய்யும் பழக்கம் பள்ளிக்கூடங்களில் கற்பிக்கப்பட வேண்டும் என்றே தோன்றுகின்றது. மருத்துவரைப் போல், பல் மருத்துவர் ஒருவரும் மிகவும் அவசியம்.
* மூளையினை சோம்பேரியாக விட்டு விடாதீர்கள். ‘செஸ்’, ‘பஸில்’ போன்றவை மூளையினை கூர்மையாக்குபவை. இப்படித்தான் செய்ய வேண்டுமென்பதில்லை. இடது கையால் பிரஷ் கொண்டு பல் துலங்குங்கள். கண்களை மூடி துணியின் நிறத்தினை கண்டுபிடிக்க முயலுங்கள். குறுக்கெழுத்து போட்டி முயற்சி செய்யுங்கள். சுறுசுறுப்பாய் இருப்பீர்கள்.
* தியாகம் என்பது மிகப்பெரிய பொருள் நிறைந்த வார்த்தை அது அனைவருக்கும் எளிதாய் வந்து விடாது. ஆகவே நான் என் குடும்பத்திற்காக தியாகம் செய்தேன். ஆயினும் யாரும் என்னை மதிக்கவில்லை என்று உங்களை நீங்களே வருத்திக் கொள்ளாதீர்கள். உங்களால் எவ்வளவு முடியுமோ, அந்த அளவே செய்யுங்கள்.
* பிரார்த்தனை செய்பவர்கள், கடவுளை வேண்டுபவர்கள் நோய் வாய்பட்டால் எளிதில் வெளிவந்து விடுகின்றார்கள் என ஆய்வு கூறுகின்றன. அநேகருக்கு பிடித்த தெய்வம் இருக்கும். பிரார்த்தனை செய்யுங்கள். பேசுங்கள் வேண்டுங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவரா? தவறில்லை, உங்கள் ஆன்மாவோடு உங்கள் மனதோடு, உங்களோடு பேசுங்கள், தேவைகளைக் கேளுங்கள், உடல் ஆரோக்கியம் நிலைக்கும்.
* தினமும் கொழுப்பில்லாத பால், தயிர் உங்கள் உணவில் இடம் பெறட்டும். உங்களது கால்ஷியம் தேவையினை மருத்துவர் ஆலோசனைப்படி மாத்திரையாக எடுத்துக் கொள்ளுங்கள்.
* 30 வயதிற்கு மேல் எலும்பின் அடர்த்தி குறைய வாய்ப்புண்டு என்பதனை நன்கு உணருங்கள்.
* புகை பிடிப்பதனை உறுதியாய் நிறுத்துங்கள்.
* புகை பிடிப்பவரிடமிருந்து தள்ளி இருங்கள்.
* ஒரு கிரீன் டீ நாள் ஒன்று எடுத்துக் கொள்ளலாமே.
* மிளகு, பட்டை, வெங்காயம், பூண்டு, வெங்காயத்தாள் இவற்றினை முடிந்தவரை அடுப்பில் சமைக்காது எடுத்துக் கொள்வது மிக நல்ல பலனை அளிக்கும்.
* தக்காளியில் உள்ள லைகோபேன் புற்று நோயையும் எதிர்க்கும் சக்தி படைத்தது. வைட்டமின் ‘சி’ நிறைந்தது. சலட் உணவில் அன்றாடம் - ஒரு - இரண்டு தக்காளியினை முடிந்தவரை சமைக்காத உணவாக சேர்த்துக் கொள்ளுங்கள்.
* தக்காளியும், ஆப்பிளும் ஆஸ்துமா மற்றும் நுரையீரல் நோய்களை தடுக்க வல்லது.
* நார் சத்து மிகுந்த தானியம், கொட்டைவகைகள், வாழைப்பழம் இவை மூளையில் செரடோனின் சுரக்கச் செய்யும். செரடோனினே ஒருவரை நல்ல ஆக்க உணர்வாக இருக்க செய்யும்.
* வைட்டமின் ‘ஏ’ சத்து நோய் எதிர்ப்பு சக்திக்கு மிகவும் முக்கியமானது. பால் சார்ந்த பொருட்கள், பச்சை, மஞ்சள் காய்கறிகள், பப்பாயா, மாம்பழம் இவைகள் உணவில் சேர வேண்டும் என்பதனை குறிப்பாக இல்லத்தரசிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.
* சுத்தமான நீர் அவசியம். அதற்காக மிக அதிகமான நீர் குடிப்பதும் ஆபத்தினை விளைவிக்கும்.
* தினமும் நடக்கவும். அரை மணி நேரமாவது நடக்க வேண்டும். தினமும் சில நிமிடங்கள் நன்கு வேகமாக நடக்க வேண்டும்.
* உங்கள் ஹார்மோன்களின் செயல்பாட்டு திறனை 25 வயதிற்குப் பிறகு முறையான பரிசோதனை மூலம் அறிவது உங்களை வெகுவாய் காப்பாற்றும்.
* வெயிலில் இருந்து சருமத்தினை பாதுகாக்கும் கிரீம் அவசியம் தடவுங்கள்.
* சந்தோஷமா? சிரித்து விடுங்கள், மன வருத்தமா? அழுது விடுங்கள். இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியினை காக்கும்.
* கொதிக்க கொதிக்க நீரினை தலையில், உடலில் ஊற்றி குளிக்காதீர்கள். சிறு குழந்தைகளை இவ்வாறு செய்யும் வழக்கம் இன்னமும் இருக்கின்றது. அலற, அலற குழந்தைகளை இப்படி குளிக்க வைப்பது அக்குழந்தைகளுக்கு கடும் தீமைகளை விளைவிக்கும் என்பதனை அறியுங்கள்.
* ‘ரிலாக்ஸ்’- உடலை கடுமையான ஸ்டிரெஸ் கொண்டு தாக்காதீர் உங்களுக்கு பிடித்த வகையில் உங்களை ‘ரிலாக்ஸ்’ செய்து கொள்ளுங்கள்.
* ‘டயர்டாக்‘ சோர்வாக உணர்கின்றீர்களா? சற்று உடற்பயிற்சி செய்து பாருங்கள். புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
* இன்றைய இளம் தாய்மார்கள் சிறு குழந்தைகளை வளர்க்கும் காலத்தில் மிகவும் மன உளைச்சல் அடைந்து விடுகின்றனர். காரணம் கூட்டு குடும்பம் இல்லை. இது அவரவர் விருப்பத்தினை பொறுத்தது என்றாலும் அத்தாய்மார்கள் உடல் அளவிலும் மன அளவிலும் தன்னை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு அவர்கள் தன்னை மன மகிழ்வோடு வைத்துக் கொள்ள தினம் வீட்டிலேயேவாது 20 நிமிட உடற்பயிற்சி செய்ய வேண்டும். சற்று வெளியே வந்து இயற்கையோடு இருக்க வேண்டும். கணவர் மற்றும் வீட்டில் இருக்கும் நபர்களுடன் இரவு உணவினை சேர்ந்து உண்ண வேண்டும். குழந்தையோடு சிறிது நேரம் சிரித்து விளையாடுங்கள்.
* மீன் உண்ணும் பழக்கம் உடையவர்கள் இந்த உணவினை நன்கு எடுத்துக் கொள்ளலாம்.
* மனைவியின் உடல் நலனுக்கு அக்கறை கொடுங்கள். மனைவி உடல் நலம் பாதிக்கப்பட்டால் கணவன் உடல் நலம் பாதிக்கப்படுகின்றது.
* ஓம் என காலையில் சில முறை சொல்வது சைனஸ் பகுதிகளை அடைப்பின்றி வைக்கும்.
* இடுப்புக்கு கீழே சாதாரன நீரில் சிறிது நேரம் இருப்பது வலிக்கும் சதைகளின் வலியை நீக்கும்.
* குறைந்தது ஆறு மணி நேரமாவது தூங்குங்கள்.
* உடலை உறுதியாய் வைத்திருங்கள். அதற்காக எலும்பும் தோலுமாக இருக்க வேண்டும் என்பதில்லை.
* அதிக வெள்ளைப் பொருட்களை தவிர்ப்பது நல்லது என்று பரிந்துரைக்கின்றனர். அரிசி, மாவு, சர்க்கரை இவற்றினை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள்.
* ப்ரோக்கோலி எனப்படும் பச்சை காலிபிளவர் கல்லீரலை சுத்தம் செய்ய வல்லது.
* 40 வயதினை கடந்தவர்கள் வைட்டமின் டி தேவையா என்பதினை அறிந்து எடுத்துக் கொள்ளுங்கள்.
* சாப்பிட்டவுடன் ‘ஸ்வீட்’ வேண்டும் என்ற பழக்கத்தினை நீக்கி சிறிதளவு பழம் எடுத்துக் கொள்ளுங்கள்.
* இளைக்க வேண்டுமா? நன்கு தூங்குங்கள்.
* சிகப்பு அசைவத்தினை முடிந்தால் அடியோடு தவிர்த்து விடுங்கள். மிகப்பெரிய ஆபத்தினை இது உடலுக்கு ஏற்படுத்தலாம்.
* காலையில் 150 மி.லி. வெதுவெதுப்பான நீர் அருந்தலாம்.
* வெறும் வயிற்றில் கடின உடற்பயிற்சி செய்யாதீர்கள்.
* எப்பவும் சோகமாகவே இருக்காதீர்கள். இதுவே மிகப்பெரிய நோய்.
* நாள் ஒன்றுக்கு மூன்று முறை என்றில்லாமல் 5 முறை என்று உணவினை பிரித்து உண்ணுங்கள். இதில் பழங்கள், நீர், சாலட் என பிரித்துக் கொள்ளலாம்.
* 20 வயதிற்குப் பிறகு மருத்துவ ஆலோசனை படி உங்களுக்குத் தேவையான வைட்டமின்களை அவசியம் எடுத்துக் கொள்ளுங்கள்.
* பகல் உணவோ, இரவு உணவோ காய்கறி சாலட் உடன் ஆரம்பிக்க வேண்டும்.
* 10-15 நிமிடங்கள் வரை காலை அல்லது மாலை சூரிய ஒளி உடலில் பட வேண்டும்.
* செயற்கை பானங்கள் கண்டிப்பாக வேண்டாம்.
* ஆழ்ந்த மூச்சினை தினமும் 2-5 நிமிடங்கள் வரை இருமுறை செய்யுங்கள்.
* காலை அரிசி உணவு, மதியம் அரிசி உணவு, இரவு அரிசி உணவு என்று இல்லாமல் பல வகை உணவுகளை மாற்றி மாற்றி எடுத்துக் கொள்ளுங்கள்.
* இரவு 10 மணிக்கு தூங்கச் செல்வது தவறு.
* ‘நொறுங்க தின்றால் நூறு வயது’. உணவினை நிதானமாய் நன்கு மென்று உண்ணுங்கள்.
* இரவு படுக்கச் செல்லும் 2 மணி நேரத்திற்கு முன் இரவு உணவினை முடித்துக் கொள்ளுங்கள்.
* அவ்வப்போது உண்ணாவிரதம் இருங்கள்.
* பசிக்காமல் ஒரு போதும் சாப்பிடாதீர்கள்.
* கொஞ்சம் நல்ல நண்பர்களோடு பேசுங்கள்.
* நீச்சல் தெரியுமா? பழகிக் கொள்ளுங்கள். சிறந்த உடற்பயிற்சி. மன மகிழ்வும் தரும்.
* செருப்பு, ஷூ இவைகளை தரமானதாக வாங்குங்கள்.
* வசதி இருந்தால் அவ்வப்போது மசாஜ் செய்து கொள்ளுங்கள்.
* மனக்கவலை இருக்கும் பொழுது தூங்காதீர்கள். பாட்டு கேளுங்கள். புத்தகம் படியுங்கள்.
* அறிவுப்பூர்வமான சிந்தனை உடையவர்களிடம் பேச்சே வேண்டாம். உங்களை அது பாதிக்கும்.
* ஆரோக்கியம் உங்கள் வாழ்வின் உரிமை என உணருங்கள்.